சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில்  தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா முதல் அலையின் போது கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் 7-ம் அகழாய்வுப் பணியில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டதால் ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் அகழாய்வுப் பணிகள் துவங்கின. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி இந்த பணிகளை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு  பார்வையிட்டார். அவருடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

 


 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு..,” இந்திய தொல்லியல் துறையிடம் முதல் மூன்று கட்டமாக நடைபெற்ற கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையையும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையையும் குறித்து கேட்டுள்ளோம். அவை வர வேண்டியதுள்ளது. ஒன்றிய அரசு இந்த ஆய்வு அறிக்கைகளை விரைவாக வெளியிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக சிறப்பான வகையில் அருங்காட்சியகத்தை அமைக்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். பல்வேறு வகையான கேலரிகள் அங்கே அமைக்கப்பட உள்ளன. கீழடி அகழாய்வை தொடர்ந்து தமிழக அரசு முன்னெடுத்து செல்லும். 8-ம் கட்ட அகழாய்வு தேவையைப் பொறுத்து தொடரும். கடந்த 6 கட்ட  அகழாய்வுகளும் அப்படித்தான் நடைபெற்றுள்ளன” என்றார். தற்போது கீழடி 7-ம் அகழாய்வுப் பணி வேகமெடுத்து வருகிறது.

 




 

 

இந்நிலையில் மணலூர் பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது குழந்தையின் எலும்பு ஒன்று கிடைத்துள்ளது. கீழடி அகழாய்வில் கொந்தகை மட்டும் தான் பரியல் சைட், ஈமக்காடு என்று சொல்லக்கூடிய சுடுகாட்டுப்பகுதி. கீழடி, அகரம், மணலூர் ஆகிய பகுதி மக்கள் வாழ்விட பகுதி. இந்நிலையில் மணலூர் பகுதியில் முதன்முறையாக குழந்தையின் எலும்பு கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 



 

இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் சிலர்" கீழடி -6ம் அகழாய்வின் போது மணலூர் ஆய்வில்

 உலை போன்ற அமைப்பு கிடைத்தது. இந்த உலை அல்லது அடுப்பு போன்ற அமைப்பு இரண்டாம் கட்ட அகழாய்விலும் கிடைத்தது. அதே போல்  ஆறாம் கட்டத்திலும் அதேபோன்ற வடிவமைப்பு கிடைத்தது தொல்லியல் ஆர்வலர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் 7-ம் கட்ட அகழாய்வில் குழந்தையின் மண்டை ஓடு கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலூர் ஒரு பரியல் சைட் இல்லை. மக்கள் வாழ்விட பகுதி இங்கும் எலும்பு கிடைப்பது வேறு ஏதோ தொடர்ச்சியை சொல்கிறது. எனவே முழுமையான ஆய்வில் இது போன்ற விசயங்கள் விளங்கும் " என்றனர்.