ஈரோடு மாவட்டம், அந்தியூர் கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இவருக்கும் சேலம் மாவட்டம் , ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த தரணி தேவி என்பவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் கவின் பிரசன்னா என்ற ஆண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே தனது தாயார் வீடான ஆத்தூருக்கு சென்று விட்டார். தரணிதேவி. நேற்று முன்தினம் சபரிநாதன் தனது மனைவியை சமரசம் செய்வதற்காக சென்று மனைவியுடனும், அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்.


அதற்குப்பின் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துள்ளன. மனைவியை  வீட்டுக்கு அழைத்துச்சென்ற நேரத்தில் வழிப்பறி நடந்தது என ஒரு புகார் ஒன்றை குமாரபாளையம் காவல் நிலையத்தில் தெரிவித்தார் சபரிநாதன். அந்த புகாரில், குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியான கோட்டைமேடு பகுதி மேம்பாலத்தில் வரும் பொழுது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் காரை வழிமறித்து தன்னையும், தனது மனைவியையும் தாக்கினர். மனைவியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதில் மயக்கம் அடைந்த தனது மனைவியை பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துச்சென்றேன். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’’ எனக் குறிப்பிட்டார்.




இந்த புகாரின் அடிப்படையில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. சபரிநாதன் கூறியதுபோல வழிப்பறி நடந்ததற்கான சம்பவங்கள் ஆதாரங்கள் ஏதும் இல்லாததால், தரணி தேவியின் கணவர் சபரிநாதன் மீது சந்தேகம் வலுத்தது.


இதனடிப்படையில் தனிப்படை போலீசார் சபரிநாதனை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


சபரிநாதன் கல்லூரியில் படிக்கும் போதே அவருடன் படித்த ஒரு பெண்ணுடன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். தனியாக வீடு எடுத்தும் தங்கியுள்ளனர்.இவருக்கு மற்றொரு திருமணம் நிச்சயிக்கப்பட்டு  நடைபெற உள்ளதை தெரிந்துகொண்ட பெண், சபரிநாதன் அண்ணன் மோகனை தொடர்பு கொண்டு தாங்கள் தனியாக குடும்பம் நடத்தி வருவதாகவும், ஏற்கனவே இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




இதனிடையே பல பிரச்னைகளுக்கு நடுவே தரணி தேவியை திருமணம் செய்துள்ளார் சபரிநாதன்.


இந்த சூழ்நிலையில் ரேவதி, தரணி தேவிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஏற்கனவே எனக்கும் சபரிநாதனுக்கும் திருமணம் முடிந்ததால் நான் (ரேவதி) தான் முதல் மனைவி என்றும் சில போட்டோக்களை இணைத்தும் கடிதம் எழுதியுள்ளார். இது சபரி-தரணி இடையே புயலை கிளப்பியுள்ளது.இதனால் தான் தரணி தேவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.


இந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு காரில் செல்லும் போதே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் தரணியின் கழுத்தை நெரித்ததால் அவர் உயிரிழந்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் சபரி. 


கணவனே, மனைவியை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.