ADMK Expelled Pugazhendhi: ’நேற்று மரங்கொத்தி கதை சொன்ன புகழேந்தி’ இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதை..!

தன்னுடைய ஆதரவாளராக அறியப்பட்ட புகழேந்தியை நீக்க தானே கையெழுத்திடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ஒபிஎஸ். தனக்கு ஆதரவாக பேசியவரை கூட காப்பாற்றும் நிலையில் அவர் இல்லை என்பதே இதன் மூலம் தெரியவருகிறது. இனிமேல் ஒபிஎஸ்க்கு ஆதரவான நிலைப்பாட்டை யாரும் எடுத்துவிடக்கூடாது என்ற வியூகத்தில் வெற்றி பெற்றிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு

Continues below advertisement

’தேக்குமரத்தை மரங்கொத்தி கொத்திக்கொண்டிருக்கும்போது, மரத்தில் ஒரு சின்ன அதிர்வு ஏற்படுமாம், அதை பார்த்த அந்த மரங்கொத்தி, இந்த மரத்தையே தான்தான் சாய்த்துக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொள்ளுமாம், அதேபோலதான் நாங்கள் இல்லையென்றால் அதிமுக கூட்டணியே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார்’ என்று நேற்று கதை சொன்ன புகழேந்தி, இன்று அதிமுகவில் இருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார்.

Continues below advertisement

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி

ஒபிஎஸ்-சை நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்றும், அரசியலில் அவருக்கு செல்வாக்கு இல்லை எனவும் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்து பிரஸ் மீட் வைத்த புகழேந்தியைதான் அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டிருக்கின்றனர்.

இதில் சுவாரஸ்சியமான விஷயம் என்னவென்றால் ஒபிஎஸ்க்கு ஆதரவாக பேசிய புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்க ஒ.பன்னீர்செல்வமே கையெழுத்திட்டதுதான்.  எதற்கு புகழேந்தியை நீக்க வேண்டும் என்று கேட்ட ஒ.பன்னீர்செல்வத்தை, அவரை நீக்க வேண்டும் என்பது நிர்வாகிகளின் பெரும்பான்மையான முடிவு, நீங்கள் கையெழுத்து போட்டுத் தான் ஆகவேண்டும் என்று சொல்லி, கையெழுத்து வாங்கி நீக்கியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

எங்கு சென்றாலும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போகிறேன் பத்திரிகையாளர்கள் எல்லாம் வந்துவிடுங்கள் என மெசேஜ் தட்டிவிடும் புகழேந்தி, செய்தியாளர் சந்திப்பில் தன் இஷ்டத்திற்கு கருத்துகளை வாரி இறைத்துக்கொண்டிருப்பார். இதனை அவர் மீண்டும் கட்சியில் சேர்ந்ததில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, அவரை கட்டம் கட்டி தூக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தது. இப்போது, கூட்டணியில் இருக்கும் பாமகவிற்கும் அன்புமணி ராமதாசிற்கும் எதிராக, கட்சியின் அனுமதியின்றி கருத்துகளை உதிர்த்ததாக சொல்லி கட்சியில் இருந்து அவரை நீக்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற புகழேந்தி, ஓபிஎஸ்தான் கட்சிக்கு சிறந்த தலைமை. தென்மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அதிமுக தோற்றதற்கு, பாமகவின் கோரிக்கையை ஏற்று, உள் இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அறிவித்ததே காரணம் என பேசியிருந்தார். இதில் கடும் அப்செட்டான எடப்பாடி பழனிசாமி, அப்போதே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னுடைய சகாக்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் ஒபிஎஸ்க்கு ஆதரவாக இருப்பதால் இப்போது நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்காது, அதற்கு தோதான நேரம் வரும்போது செய்யலாம் என்று எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சொல்லியிருக்கின்றனர். அப்படி அவர்கள் எதிர்ப்பார்த்த நேரமும் வந்ததால், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவரை ஒபிஎஸ்-ன் கையெழுத்தோடு நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

வி.கே.சசிகலா

அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது சசிகலா அணியில் செயல்பட்ட புகழேந்தி, திடிரென ஒரு நாள் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கே சென்று தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். எடப்பாடியை சந்தித்து அவரை புகழ்ந்து அப்போது பேசினாலும், அதன்பிறகு ஒபிஎஸ்-சின் ஆதரவாளராகவே அறியப்பட்டார். ஆனால், தனக்கு ஆதரவாக பேசிய, தன்னை நல்ல தலைமை என்று சொன்ன, தன்னுடைய ஆதரவாளராக அறியப்பட்ட புகழேந்தியை கூட ஒ.பன்னீர்செல்வத்தால் காப்பற்ற முடியவில்லை என்பது காலத்தின் கோலம்தான்.ஒபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்ட புகழேந்தி கட்சியை வீட்டு நீக்கப்பட்டிருப்பதால், அடுத்தடுத்து யாரும் ஒபிஎஸ்க்கு ஆதரவான நிலைபாடு எடுத்து செயல்பட மாட்டார்கள் என்பது எடப்பாடி பழனிசாமி தரப்பின் வியூகமாக இருக்கிறது.

ஒ.பன்னீர்செல்வம்

அதனால், தற்போது ஒபிஎஸ் ஆதரவாளர் என்று அறியப்படுகிற ’ஒரே ஒரு’ மனோஜ்பாண்டியன் கூட நாளடைவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறிவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள முடியாதது, எதிர்கட்சித் தலைவராக கூட ஆக முடியாதது, தன்னுடைய ஆதரவாளரான மனோஜ்பாண்டியனுக்கு கொறடா பதவியை பெற்றுத் தர முடியாதது என தன்னுடைய செல்வாக்கை அனுதினமும் இழந்து வரும் ஒபிஎஸ், இப்போது வேறு வழி இன்றியே முன்னர் மறுத்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola