முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த தமிமுன் அன்சாரி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


மனிதநேய ஜனநாயக கட்சி


மனிதநேய மக்கள் கட்சியில் உறுப்பினராக இருந்த தமிமுன் அன்சாரி, 2016 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு, எம்.எல்,ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.




அதையடுத்து, 2021 ஆம் ஆண்டு அதிமுக பாஜக-வோடு கூட்டணி வைத்ததன் காரணமாக, அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டார். சமீப காலமாக கட்சியின் பொருளாளர் ஹாரூனுக்கும், பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில், கட்சியிலிருந்து ஹாரூனை நீக்கம் செய்வதாக தமிமுன் அன்சாரி அறிவித்தார். 


அதனை தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை ஷாரூன் கூட்டினார்.இந்நிலையில், தற்போது மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


பொதுக்குழு:


மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கட்சியில் 6 மாத காலட்துக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஹாரூன் ரசித் தேர்வு செய்யப்பட்டார்.


மேலும், தமிழ்நாட்டிற்கு வட மாநிலத்தவரின் வருகையை கண்காணிக்கவும், முறைப்படுத்த கோரியும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் மீது வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டதை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இடைநீக்கம்:


இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரூன் ரசித் தெரிவிக்கையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, பொதுக்குழுவின் ஒப்புதலோடு 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். 




கட்சியில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாலும், மாவட்ட நிர்வாகிகளுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாலும், கட்சியின் விதிகளுக்கு எதிராக நடப்பதாலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஹாரூன் ரசித் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் கட்சி தொடங்கிய தமிமுன் அன்சாரியே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: Shiv Sena Party: ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், சின்னத்தையும் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு


Also Read: Abp Nadu Exclusive: தமிழக அரசியல் மாண்பை சீர்குலைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி%C2%A0 பிரச்சாரம் - ரவிக்குமார் குற்றச்சாட்டு