CM Stalin Foreign Visit: முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார்.


முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்:


 தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின், துபாய் வழியாக சுவீடன் சென்றடைகிறார். அங்கிருந்து ஸ்பெயின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமின்றி, முக்கிய அரசு அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து இங்கிலாந்து,  ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் முதலமைச்சர் பயணிக்கவுள்ளார். அங்கிருந்தும் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தொழில்நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு, எப்போது வெளிநாடு திரும்புவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் நாடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு:


இந்நிலையில் இன்று இரவு 07.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில், முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் (VIP Lounge) அருகில்  முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது தனது பயண திட்டம் தொடர்பான விவரத்தை அவரே விளக்க உள்ளார். அதோடு, தான் மாநிலத்தில் இல்லாத நேரத்தில் நடைபெற உள்ள அரசு நிர்வாகம் தொடர்பாகவும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த பயணத்தின் போது, முதலமைச்சரின் தனிச் செயலர் முருகானந்தம், தொழில்துறைச் செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.


இதையும் படிங்க: ரூ.692 கோடி அபராதம்.. பாலியல் புகார் தொடர்பான வழக்கில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பு..


முதலீட்டாளர்கள் மாநாடு:


கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக  முதலீடுகள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அப்போதே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது வெளிநாட்டு பயணத்த்தை தொடங்குகிறார்.


இதையும் படிங்க: ஒடிசாவில் நேர்ந்த பயங்கர விபத்தின் சிசிடிவி காட்சிகள் - தூக்கி வீசப்பட்ட நபர்கள்