Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில், மான்ஹாட்டன் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
டிரம்புக்கு ரூ.692 கோடி அபராதம்:
அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக பிரபல பத்திரிகையாளரான ஜீன் கரோல் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தனது குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்ததோடு, நம்பகமான பத்திரிகையாளர் என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் ஜீன் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான விசாரணை மான்ஹாட்டன் நடுவர் நீதிமன்றத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் முடிவில், மனுதாரருக்கு டிரம்ப் 83.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 692 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டிரம்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் தீவிரம் காட்டும் டிரம்ப்:
2020 ஆம் ஆண்டில் தன்னைத் தோற்கடித்த ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனை எதிர்த்து மீண்டும் களமிறங்க, குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் முன்னணியில் இருக்கிறார். வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டிரம்பிற்கு, கரோலின் தொடர்ந்துள்ள வழக்கு சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கின் விசாரணையில் கலந்து கொண்டாலும், தீர்ப்பு வழங்கும்போது அவர் அங்கு இல்லை. அதேநேரம், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "எங்கள் சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை, மேலும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இது அமெரிக்கா அல்ல" என்று குறிப்பிட்டு இருந்தார்.
கரோல் மகிழ்ச்சி:
தீர்ப்பு தொடர்பாக பேசிய 80 வயதான கரோல், "இது வீழ்த்தப்படும் போது எழுந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மேலும் ஒரு பெண்ணை வீழ்த்த முயற்சிக்கும் ஒவ்வொரு கொடுமைக்காரனுக்கும் மிகப்பெரிய தோல்வி" என்று குறிப்பிட்டார். முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற மற்றொரு அவதூறு வழக்கிலும், கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு மான்ஹாட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டுகளும் - மறுப்பும்:
1990 களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனில் உள்ள பெர்க்டார்ஃப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் வைத்து, ட்ரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கரோல் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு வழக்கும் தொடர்ந்தார். ஆனால் டிரம்ப்போ, ”கரோலைப் பற்றி தான் கேள்விப்பட்டதே இல்லை. தனது புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க கதையை உருவாக்கியுள்ளார். கரோல் புகழுக்கான பசியுடன் இருப்பதாகவும், தனக்கு எதிரானவர்களுக்கு எதிராக பேசுவதற்கு ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.