இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை 5.30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்த நிலையில், இன்று மாலை சென்னையில் உள்ள இல்லத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. பழம்பெரும் நடிகர் சிவகுமார், நடிகர் விஜய்யின் அம்மாவும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட திரைபிரபலங்கள்  பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


இயக்குனர் வெற்றிமாறன் வந்து அஞ்சலி செலுத்திய போது, "பாடகி பவதாரிணியின் மறைவு இளையராஜாவின் குடும்பத்திற்கு மட்டுமல்ல இசையுலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு " என்று கூறினார். அதேபோல், பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ஆனந்த் ராஜ் பேசுகையில், "எமனுக்கு என்ன வேண்டும் எனத் தெரியவில்லை. திரையுலகில் இருந்து ஒவ்வொருவரையும் அபகரித்துக்கொண்டுள்ளார். மனைவியை இழந்து வாடும் இளையராஜா சாருக்கு மகள் துணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் இறந்தது பேரதிர்ச்சி. இந்த சோகத்தை தாங்கும் பலத்தை இறைவன் இளையராஜா சார் குடும்பத்திற்கு தரட்டும்" என்று கூறினார்.


அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி:


அதேபோல், இயக்குனர் தங்கர் பச்சன், சுதா கொங்கரா,விஷால் கார்த்திக் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, அமைச்சர் ஜெயக்குமார், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் அஞ்சலில் செலுத்தினார்கள். 


அஞ்சலி செலுத்திய பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளும், என் நண்பர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான தங்கை பவதாரிணியின் மறைவு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. கலைஞரின் குடும்பம் சார்பாக இளையராஜா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் அஞ்சலி செலுத்த வர வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் நாளை மாலை அவர் வெளிநாடு கிளம்புகிறார். இதனால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கிறார். அவர் சார்பில் இப்போது நான் அஞ்சலி செலுத்த வந்தேன்” என கூறினார்.