Odisha Road Accident: ஒடிசாவில் அதிவேகமாக வந்த கார் மோதியதால் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா விபத்து - 3 பேர் பலி:


ஒடிசாவின் கோரபுட் மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் அடுத்தடுத்து, பைக், ஆட்டோ மற்றும் டிராக்டரின் மீது விபத்துக்குள்ளானது. போரிகும்மா காவல்துறை எல்லைக்குட்பட்ட பிஜப்பூர் சதுக்கம் அருகே, பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 3 பேர் உயிரிழக்க, காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நவீன் பட்நாயக், தலா 3 லட்ச ரூபாய் இழப்பீடும் அறிவித்துள்ளார்.


விபத்து நடந்தது எப்படி?


இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் அதிகளவில் பரவி வருகிறது. அதன்படி, அந்த  குறுகலான சாலையின் ஒருபுறத்திலிருந்து ஒரு ஆட்டோவும், சத்திஸ்கர் மாநில பதிவு எண் கொண்ட காரும் வந்துள்ளது. மறுமுனையில் ஒரு டிராக்டர் மற்றும் 2 மோட்டர் சைக்கிள்கள் வந்துள்ளன. ஆட்டோவிற்கு பின்புறமாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த அந்த கார், வலதுபுறமாக ஏறிவந்து ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளது. அப்போது நேர் எதிராக ஒரு மோட்டர்சைக்கிள் வந்ததை கண்டதும், கார் நொடிநேரத்தில் இடதுபுறமாக திரும்பியது. ஆனாலும், காரின் ஒரு ஓரத்தில் மோட்டர்சைக்கிள் முட்டியதில், தரையில் கவிழ்ந்து பல அடி தூரம் சென்று நின்றது.






இதனிடையே, காரானது முன்னே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆட்டோவை முட்டி மோதிய கையோடு, பக்கவாட்டில் இருந்த டிராக்டர் மீது லேசாக ஒரசி, நேர் எதிரே வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிளை இடித்து தூக்கி வீசி, சாலையோரம் சென்று நின்றது. விபத்தில் டிராக்டரில் பயணித்தவர்களுக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. கார் இடித்ததில் சுமார் 15 பேர் பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோ, பக்கச்வாட்டில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அதில் 2 பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். அதோடு, கார் இறுதியாக மோதிய மோட்டார்சைக்கிளில் பயணித்த நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்தவர்கள் SLN மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.