மிக்ஜாம் புயல் உருவாகவுள்ள நிலையில் இன்று (டிசம்பர் 3) காற்று மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று புயலாக வலுவடைய உள்ளது. மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு வட கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திராவில் நாளை (டிசம்பர் 4) மையம் கொள்ளும். பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை மறுநாள் (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் மீட்பு பணியில் ஈடுபட ஊழியர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேர்காணலில் மிக்ஜாம் புயல் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “நாம எல்லோரும் புயல் என்றாலே கரையை கடப்பது பற்றி மட்டும் தான் பார்க்கிறோம். அதற்கு முன்னாடி அது செல்கின்ற பாதையை கவனிக்க வேண்டும். டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி வடதமிழக ஏரியாவில் பயணித்து தென் ஆந்திரா பக்கம் செல்கிறது. இதனால் கனமழை முதல் அதிகனமழைக்கு பெய்ய வாய்ப்பிருக்கிறது. நாளை அதிகாலை சென்னைக்கு அருகே மையம் கொண்டிருக்கும் என்பதால் அதனை சுற்றியுள்ள மேகங்கள் அடர்ந்த மேகங்களாக இருக்கும். இது சென்னை அல்லது திருவள்ளூர் பகுதியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தமிழ்நாட்டை ஒட்டி வரும் முதல் புயல் இதுதான். இங்கு கரையை கடக்கவில்லை என்றாலும் கரையை கடக்கும் ஆந்திராவை ஒட்டியுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கொஞ்சம் மேகம் நகர்ந்து சென்றால் கடலூர் பகுதிகளில் மழை பெய்யும். காற்று மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். 20 நிமிடத்திற்கு ஒருமுறை மழை பெய்யும். இன்று இரவு முதல் நாளை வரை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளப்பக்கத்திலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புயல் சென்னைக்கு மிக அருகில் வரும் நிலையில் அடத்தியான மேகங்கள் காஞ்சிபுரம், சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் விழும். இதனால் இன்று இரவு முதல் நாளை வரை ஒரு நாள் முழுக்க மழைக்கு வாய்ப்பிருக்கும். மேலும் நான் மிகவும் அரிதாகவே இதுபோன்ற தீவிர எச்சரிக்கைகளை தெரிவிப்பேன். முன்னதாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 1-2, 2015, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 11-12 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து இப்போது டிசம்பர் 3-4 ஆகிய நாட்கள் எச்சரிக்கை விடுக்கிறேன். கிட்டதட்ட மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் 200 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Election Results 2023 LIVE: 4 மாநிலத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை! - பாஜக - காங்கிரஸ் அரியணை யாருக்கு?