வங்கக் கடலில் சென்னைக்கு  அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுவதாக சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் தெரிவிக்கபட்டது.



 

மிக் ஜாம் புயலினால் ஏற்படும் கன மழையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



 

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து சமாளிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான குழுக்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளம் பாதிப்பை சமாளிப்பதற்காக பேரிடர் மேலாண்மை வீரர்களும் வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.அதன்படி காஞ்சிபுரம்  மாவட்டத்தில் மிக் ஜாம் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் இருந்து 25 பேரும், அரக்கோணத்தில் இருந்து 25 பேரும்,50 தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள்  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர்  இரண்டு குழுக்களாக பிரிந்து காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலும், காஞ்சிபுரம் பகுதியிலும்  பணியில் ஈடுபட பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.


 

4,5ம் தேதிகளில் மக்கள் வெளியில் வரக்கூடாதா? உண்மை என்ன?





வரும் 3,4 ஆம் தேதிகளில் சென்னையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் புயல் காரணமாக சென்னை மக்கள் வெளியே வர வேண்டாம் என பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காற்றழுத்த தாழ்வு மண்டலம்:


இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றுக்கு தாழ்வு மண்டலமாக  இன்று காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 670 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.


 இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும். அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5 ஆம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும்.


அடுத்த 3 தினங்கள்:


 வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.