தமிழ்நாடில் இன்று மற்றும் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது என குறித்து தெரிந்து கொள்வோம்.
தென்னிந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை
நாளைய தினத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 20:
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது, மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 22,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 16,500 கன அடியாக குறைந்துள்ளது.
Also Read: தூத்துக்குடி துறைமுகத்தில் நவம்பரில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை - துறைமுக ஆணையத் தலைவர்