தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என, துறைமுக ஆணையத் தலைவர் சுசந்த குமார் புரோகித் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.




தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் சார்பில் சுதந்திர தின விழா துறைமுக பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. துறைமுக ஆணையத் தலைவர் சுசந்த குமார் புரோகித் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்பு படை, துறைமுகப் பள்ளியின் தேசிய மாணவர் படை, துறைமுகப் பள்ளி மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.




தொடர்ந்து அவர் பேசியதாவது, வஉசி துறைமுகத்தில் 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் வசதியுடன் கூடிய 9-வது பொது சரக்குதளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல், ஆண்டுக்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளத்தை முழுமையாக இயந்திரமயமாக்கல் மற்றும் மிதவை ஆழத்தை 14.20 மீட்டராக ஆழப்படுத்துதல் போன்ற வளர்ச்சி திட்டங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.கடந்த பிப்ரவரி மாதம் பாரத பிரதமர் அடிக்கல் நாட்டிய வஉசி துறைமுகத்தின் கனவு திட்டமான வெளித்துறைமுக திட்டத்துக்குகான மதிப்பாய்வு செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


மேலும், வஉசிதம்பரனார் துறைமுகத்தில் ஒரு மணி நேரத்துக்கு 10 Nm³ உற்பத்தி திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பசுமை ஹைட்ரஜன், அமோனியா, மெத்தனால் சேமிப்பு வசதியை ஏற்படுத்தும் பணி 2025 டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்றார்.




தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 


விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 51 பயனாளிகளுக்கு 1,14,79,790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா, சைபர் கிரைம் ஏடிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் உட்பட 66பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும். வருவாய் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, செய்திமக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 228 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கி பாராட்டினார்.




இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடியேற்றப்பட்டு  சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சிறந்த பஞ்சாயத்து நகராட்சி தேர்வுநிலை பேரூராட்சி மாநகராட்சி என தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி சிறப்பிக்கபட்டு வருகிறது. அந்த வகையில்  தூத்துக்குடி மாநகராட்சி 2வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 




இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் கொடி கம்பத்தில் நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் காந்திமதிநாதன் கூறும்போது, சுதந்திர தினத்தன்று மேயர் அல்லது மாநகராட்சி ஆணையர் கொடியேற்றுவது வழக்கம் இன்றைய நாளில் மேயரோ ஆணையரோ இல்லையென்றால் துணை மேயர் இருந்திருக்கிறார் அவர் கொடியேற்றி இருக்கலாம். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் தடுத்திருக்கலாம், எப்படி இருந்தாலும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றாதது மிகவும் வருத்தத்திற்கு உரியது என்றார்