ஆடி பெருக்கை முன்னிட்டு கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றில் பொதுமக்கள், புதுமண தம்பதியினர் தேங்காய், பழம், அரிசி படையலிட்டு காவிரி தாயை வழிபட்டனர்.


நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். அவரின் கூற்றுப்படி இயற்கை நமக்களித்த கொடைகளில் ஒன்று நீர் நிலைகள். காலப்போக்கில் மனிதர்களின் தேவைக்கேற்றபடி அதன் வடிவம் மாறினாலும் நீரின் தேவை என்றும் மாறாமலே உள்ளது. அப்படியான நீருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், காவிரி ஆற்றங்கரையில் கொண்டாடப்படும் ஆடிபெருக்கு விழா சிறப்பு வாய்ந்தது. 




பொதுவாக ஆடிப்பெருக்கு வரும் காலக்கட்டத்தில்  காவிரி ஆறு இருகரைகளையும் தொட்டபடி பெருகி ஓடுவதைப் போல  மக்கள் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி ஓடும் என்பது ஐதீகம். அதன்படி நடப்பாண்டுக்கான ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்டம், வாங்கல், நெரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், லாலாபேட்டை ஆகிய பகுதிகளில்பொதுமக்கள் புதுமண தம்பதியினர் காவிரி ஆற்றில் வழிபாடு செய்தனர். மேலும் தேங்காய், அரிசி, பழங்களை படையலிட்டு தங்களது மாங்கல்யத்தினை வைத்து பூஜை செய்து காவிரி அன்னையை வழிபட்டனர்.




மேலும், பெண்கள் தங்களது மாங்கல்ய கயிறை புதிதாக மாற்றியும்,  திருமணமான புதுமண தம்பதியினர் தங்களது கல்யாணம் மாலையை காவிரி ஆற்றில் விட்டும் காவிரி அன்னையை வழிபட்டனர். தங்களது குடும்பம் நோய் நொடியின்றி செல்வ செழிப்புடனும் வாழையடி வாழையாக தங்களது குடும்பம் வளர வேண்டும் என்றும், அனைத்து மக்களும் நன்மை பெற வேண்டியும், விவசாயம் செழித்திடவும் காவிரி ஆற்றங்கரையில் பூஜை செய்து காவிரி அன்னையை வழிபடுவதாகவும், தங்களது முன்னோர்களின் ஆசி தங்களது குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்க ஆடிப்பெருக்கென்று காவிரி ஆற்றில் பூஜை செய்து வழிபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


இதற்கிடையில் திருச்சியிலும் ஆடிப்பெருக்கு விழா பொதுமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் எழுந்தருள உள்ளார். பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதிதா லட்சுமி தலைமையில் சுமார் 172 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.