இளைஞர் ஒருவரை கடத்தியது தொடர்பான வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தியை கைது செய்ய சென்ற காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஜெகன் மூர்த்தி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பூவிருந்தவல்லி - திருவள்ளூர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பூவிருந்தவல்லி - திருவள்ளூரில் பதற்றம்:
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசின் மீது எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், "புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், KV குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தியை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம்.
ஜெகன் மூர்த்திக்கு குறி வைத்த போலீஸ்:
அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால், மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற இந்த பொம்மை முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட Battalion-ஐ ஏன் அனுப்ப வேண்டும்?
பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் ஜெகன்மூர்த்தியை குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அதிமுக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது.
குரல் கொடுத்த இபிஎஸ்:
இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அஇஅதிமுக கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி திமுக-வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை ஸ்டாலின் உணரவேண்டும். இந்த கொடுங்கோன்மைக்கெல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026இல் திமுக-விற்கு நிச்சயமாக தருவார்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.