Haryana Violence:  ஹரியானா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாகவே வன்முறை நீடித்து வரும் நிலையில், போலீசாரால் அனைவரையும் பாதுகாக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.


ஹரியானாவில் பதற்றம்:


ஹரியானாவின் முக்கிய நகரமான குருகிராம் அருகே உள்ள நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பிரம்மாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணி கேத்லா மோட் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பினருக்கும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது. வன்முறையில் இருந்து தற்காத்து கொள்ள 2,500 பேர் கோயிலுக்கு சென்று, தஞ்சம் அடையும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. இந்த மோதல் பெரும் மதக்கலவரமாக மாறியது. நேற்று முன்தினம் இரவு மசூதிக்கு தீவைக்கப்பட்டதில் இமாம் ஒருவர் கொல்லப்பட்டார். ஹரியானா கலவரத்தால் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.


கடந்த இரண்டு நாள்களாக, பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமை கைமீறி சென்றிராத வகையில், இணையம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை முடக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக 116 பேரை அம்மாநில  போலீசார் கைது செய்துள்ளனர். இம்மாதிரியான பதற்றமான சூழ்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் பஜ்ரங் தள் அமைப்பினரும் டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.


முதல்வர் சொன்னது என்ன?


இந்த வன்முறை தொடர்பாக அம்மாநில முதல்வர்  மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”மக்களிடையே வன்முறை இல்லாவிட்டால் பாதுகாப்பு இருக்காது. ஒருவரையொருவர் வெறுத்தால் இங்கு யாருக்கும் பாதுகாப்பு இருக்காது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால்,  காவல்துறை, ராணுவம், நான் என யாராலும் இங்குள்ள மக்களை பாதுகாக்க முடியாது.  இங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைதியான சூழல் வேண்டும். சமூகத்தில் நல்லுறவு இருக்க வேண்டும். அதற்காக அமைதிக் குழுக்களை வைத்துள்ளோம். உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். காவல்துறையால் மக்கள் அனைவரையும் பாதுகாக்க முடியாது. இங்கு இரண்டு லட்ச மக்கள் இருக்கின்றனர். ஆனால் 50 ஆயிரம் போலீசார் மட்டும் உள்ளனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும்” என  வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் கட்டார்.


மேலும், “இந்த வன்முறைக்கு காரணம் என்று கூறப்படும் மோனு மனேசரைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அவருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் மோனு மனேசரை கண்டுபிடிக்க உதவி தேவைப்பட்டால், நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். இப்போது, ராஜஸ்தான் காவல்துறை அவரை தீவிரமாக தேடி  வருகிறது" என்றார் முதல்வர் கட்டார்.