தி.மு.க., ஆட்சியின் சட்டம் ஒழுங்கை பார்த்து மக்கள் எரிமலை போல் கொதித்துப் போயிருக்கிறார்கள். 2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ காட்டமான பதில்.
கொலை குற்றவாளிகள் காவல்நிலையத்த்தில் புகுந்து தாக்குதல்
திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் கொலை குற்றவாளி புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சத்திரப்பட்டிக்கு ஆய்வு செய்யச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.
செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பு
50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்..,”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல் நிலையத்திற்குள் புகுந்த குற்றவாளிகள் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி அங்கிருந்த காவலரையும் தாக்கி உள்ளனர். காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீசார் கைது செய்தது நியாயமா?. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் நடக்கும் சம்பவம் விசாரிக்கச் சென்ற போது கைது செய்துள்ளனர். காவல்துறை கைது செய்தாலும் அவர்களது உள் மனது நியாயம் என்று நினைக்கும். அவரை கைது செய்தது அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு. உளைவாயை மூடி மறைக்கலாம் ஊர்வாயை மூட முடியாது.
இது நாடா? இல்லை காடா?
இது நாடா? இல்லை காடா? காவலர்கள் நமது நண்பர்கள் என்ற அடிப்படையில் சென்றவரை கைது செய்த இந்த அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கெல்லாம் 2026 இல் மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வேண்டும். மக்களின் நிலைப்பாடு, காவலர்களின் நிலைப்பாடும் இதுதான். தமிழகத்தில் தற்போது மௌனப் புரட்சி நடைபெறுகிறது. அது எப்போது வெடிக்கப் போகிறது, என்பது தெரியவில்லை. அமெரிக்கா கலிபோர்னியாவில் 10 மாதங்களாக குமுறிக் கொண்டிருந்த எரிமலை நேற்று வெடித்து. சிதறி 100 அடி உயரத்திற்கு தீப்பிழம்பு எழும்பியது. இதேபோல் மக்களும் கொதித்துப் போய் இருக்கிறார்கள். 2026 இல் வெடித்து சிதறி தி.மு.கவை பஸ்பம் ஆக்கி விடுவார்கள்” என்றார்.