தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக பல மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த காலத்தில் மணல் குவாரிகள் தொடர்பான பல்வேறு வழக்குகளும், காவல்துறை நடவடிக்கைகளும் நடந்துள்ளது. இந்த நிலையில், மணல் குவாரிகள் விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விசாரணை செய்வதற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசு வழக்கு:
இந்த நிலையில், அமலாக்கத்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், மணல் எடுக்கும் விவகாரம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் பொதுத்துறை செயலாளர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளதை தலைமைச் செயலக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தற்போது சம்மன் அனுப்பபட்டுள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு இதற்கு சம்பந்தம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன்:
தமிழ்நாட்டில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரிகள் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஒப்பந்ததார்களையும் அமலாக்கத்துறையினர் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. தற்போது வரை அந்த 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யார்? யார்? என்ற தகவல்கள் வெளியாகாவிட்டாலும், மணல் குவாரிகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: ‘கள்ளச்சாராய தடுப்பு முதல் கொம்பன் ஜெகன் என்கவுண்டர் வரை’ திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ்-சின் அதிரடிகள்..!
மேலும் படிக்க: Minister Ponmudi: விசாரணைக்கு வாங்க; அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்