சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று பொன்முடிக்கு அனுப்பப்பட்டுள்ளது.


முறைகேடாக வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.


குறிப்பாக சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். வங்கி அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு செலவு சரிபார்க்கப்பட்டது.


 விடிய விடிய  7 மணி நேரம் விசாரணை


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் நடந்த 13 மணி நேர சோதனையை தொடர்ந்து, வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் அமலாக்கத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சரிடம் விடிய விடிய  விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. அதைதொடர்ந்து, அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார். 


இதைத் தொடர்ந்து தற்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


என்ன வழக்கு?


தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியி,ல் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 


கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்


இதற்கிடையே அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்  பதுக்கியதாக, திமுக எம்.பி. கதிர் ஆனந்த், அவரது உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இன்று (நவம்பர் 24ஆம் தேதி) அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


அமலாக்கத்துறை மூலம் மிரட்டும் மத்திய அரசு


அடுத்த  ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு திமுகவை மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட அக்கட்சித் தலைவர்கள் பலரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.