திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி பொறுப்பேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ். பதவியேற்றதும் அவர் செய்த முதல் காரியம் பொதுமக்கள் எந்த தயக்கமும் இன்றி நேரடியாக எஸ்.பியை தொடர்புகொண்டு புகார் கொடுக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிவித்ததுதான்.



வருண்குமார் ஐ.பி.எஸ்


புகார்களை நேரடி கண்காணிப்பில் வைத்திருந்த வருண்குமார்


அவர் நம்பர் கொடுத்த முதல் நாளில் இருந்து வருண்குமாருக்கு வந்தது தொடர் அழைப்புகள். கள்ளச்சாரயம், கட்டபஞ்சாயத்து, விபச்சாரம், ரவுடியிசம் என போன் வர வர அந்த பிரச்னைகளுக்கு மாவட்ட போலீசார் மூலமாக உடனுக்குடன் தீர்வு கண்டார் அவர். ஒவ்வொரு புகாரையும் வழக்கு விசாரணை முடியும் வரை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் வருண்குமார். அதன் விளைவாக திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத செயல்கள் கடந்த 2 மாதங்களில் பெரும் அளவு குறையத் தொடங்கின.


களத்தில் இறங்கி பணி செய்யும் எஸ்.பி. வருண்குமார் - பொதுமக்கள் பாராட்டு


சைரன் வைத்த காரில் அலுவலகம் வந்துவிட்டு அங்கிருந்தே பணிகளை பார்த்துச் செல்லும் பாணிக்கு பதில், வழக்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு தானே நேரடியாக விசிட் அடித்து வழக்கை துரித்தப்படுத்தும் முயற்சியை எடுத்தார் வருண்குமார். நள்ளிரவில் கூட திருச்சி மாவட்ட காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடிப்படையாக வைத்து, அவரே நேரடியாக காடுகளுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினார். கிராமங்களின் தெருக்களுக்கு சென்று மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கினார். அவர் கொடுத்த எண்ணுக்கு ஒரு சின்ன புகார் வந்தாலும் அதனை விசாரிக்க மாவட்ட எஸ்.பியே களத்தில் இறங்கிப்போனதை பார்த்த சக போலீசார் ஆடித்தான் போனார்கள்.


எஸ்.பியின் அதிரடி நடவடிக்கை - குற்றங்கள் குறையத் தொடங்கின


திருச்சி எஸ்.பி-யாக வருண்குமார் பதவியேற்ற பின்னர் அவரின் எண்ணுக்கு பெருமளவில் வந்த புகார்கள் இந்த 2, 3 மாதங்களில் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின. கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, விபச்சாரம் போன்ற சட்ட விரோத செயல்கள் பெருமளவில் தடுக்கப்பட்டன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பஞ்சாயத்தும் ரவுடியிசமும், வியாபாரிகளை மிரட்டுவதும் நடந்துகொண்டே இருந்தது.


திருந்தாத கொம்பன் - முடிந்த வாழ்க்கை


போலீசாரே நெருங்க முடியாத அளவிற்கு திருச்சி மாவட்டத்தில் சில ரவுடிகள் அட்டாகாசம் செய்து வந்தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் கொம்பன் என்ற ரவுடி ஜெகன். பல முறை போலீசார் அவரை கைது செய்து எச்சரித்தபோதும், தன்னுடைய கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசத்தை ஜெகன் கைவிடவில்லை.. திருந்தி வாழ்வதாக எழுதி கொடுத்த பின்னரும் திரைமறைவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதை கண்காணித்த போலீசார் திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு தகவல் கொடுக்கின்றனர். எஸ்..பி வருண்குமார் உத்தரவின்பேரில் தொடர் கண்காணிப்பில் இருந்த கொம்பன் ஜெகன், சின்ன சின்ன கடைகளை கூட விட்டுவைக்காமல், அவர்களிடமும் அடாவடியாக தன்னுடைய ஆட்கள் மூலம் மாமுல் வசூலித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் குவாரிகள் நடத்துவோரையெல்லாம் மிரட்டி மாதம் மாதம் மாமுல் தரவில்லையென்றால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மிரட்டியுள்ளார். புகாரை பெற்று அவர் மீது சட்ட நடவடிக்கை  எடுக்க காவல்துறை தயார் ஆகி வந்த நிலையில், வேறு ஒரு புகாரை விசாரிக்க சென்ற காவல்துறையினரிடம் ரவுடி ஜெகன் சிக்கி, போலீசாரை தாக்க முயன்றபோது சுடப்பட்டிருக்கிறார்.



'சட்டம் தன் கடமையை செய்யும்’


இது திட்டமிட்ட எண்கவுண்டர் இல்லை என்றும் தங்களுடைய பாதுகாப்பிற்காக போலீசார் சுட்டதாகவும் எஸ்.பி தெரிவித்துள்ள நிலையில், ரவுடி கொம்பன் இறப்பிற்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளுக்கு ‘சாவு பயம்’ வந்திருக்கிறது. ரவுயிசம், கட்ட பஞ்சாயத்து, வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எச்சரித்துள்ளார் திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ்