தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கை மாநிலம் முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு, கடந்த 24-ஆம் தேதி முதல் எந்த தளர்வுகளும் இல்லாமல் ஜூன் 7-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநில அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36 ஆயிரக்கம் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 34 ஆயிரம் திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளன. 12 ஆயிரத்து 959 திருக்கோயில்களில் `ஒரு கால பூஜைத்திட்டம்’ அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்ககு நிலையான சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை. கொரோனா தொற்று காரணமாக, திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் போதிய வருமானமின்றி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேற்கண்ட திருக்கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மேலும் படிக்க : Vaccine Stock : தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பக்தர்கள் வருகையில்லாத காரணத்தால் திருக்கோயில்களில் மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், திருக்கோயில் ஊழியர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருக்கோயில் ஊழியர்களின் இக்கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருக்கோயில் ஊழியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் மாதச்சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோயில் ஊழியருக்கும் மாதம் ரூபாய் 4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார். இந்த உதவித்தொகை 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் திருக்கோயில் பணியாளர் அல்லாத திருக்கோயில் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும். இதன்மூலம், மொத்தம் சுமார் 14 ஆயிரம் திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள் என்பதையும் தெரிவிக்கிறேன். இத்திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி தொடங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.