தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, கடந்த 24-ஆம் தேதி முதல் கடுமையான ஊரடங்காக மாற்றப்பட்டு, வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், பொதுமக்களுக்கு காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே கிடைக்கும் வகையில் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக அரசின் சார்பில் பலசரக்குகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக நடமாடும் மளிகை வாகன சேவை அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடமாடும் மளிகை கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் தொடங்கி வைத்தனர்.  




சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், “குற்றச்சாட்டுகளை வைப்பதைக் காட்டிலும் தடுப்பூசியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அரசுக்கு உறுதுணையாக இருந்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். தடுப்பூசிகளை பொறுத்தவரை இதுவரை மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு வந்திருப்பது 83 லட்சம் தடுப்பூசிகள். தடுப்பூசிகளை பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் கட்டியிருக்கும் தொகை ரூபாய் 85 கோடியே 48 லட்சம் இதன் மூலம் நாம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டிய அளவு 25 லட்சம். இதில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இவற்றில் மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர வேண்டும். மத்திய அரசு நமக்கு அளித்துள்ள 83 லட்சமும், நாம் கொள்முதல் செய்துள்ள 13 லட்சமும் சேர்த்து 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் அளவு 87 லட்சம். தற்போது தமிழகத்தில் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது” எனக் கூறினார்.




கொரோனா பரவலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, தமிழகத்திலும் மாநில முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறையினர் உள்பட அதிகாரிகளும், பிற அரசியல் கட்சியினரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


தமிழகத்தில் தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தவேண்டும் என்பதற்காக தமிழக அரசின் சார்பில் உலகளாவிய கொரோனா தடுப்பூசி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி செங்கல்பட்டு எச்.எல்.எல். ஆலையை தடுப்பூசி தயாரிப்பதற்காக தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அமைச்சர்களிடம் இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/tamil-nadu-corona-virus-latest-news-live-updates-covid-19-lockdown-chennai-coimbatore-district-grocery-shops-4571/amp