மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்முறையாக திருமணமான பெண் ஒருவர் அரசு பணியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவது பெண்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி ஆணுக்கு நிகராக பணி செய்து வருகின்றனர். இருப்பினும் ஒருசில துறைகளில் ஆண்கள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆண்களுக்கு என எந்தத் துறையும் கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் அனைத்து துறைகளிலும் தற்போது பெண்கள் சாதித்து வருகின்றன. குறிப்பாக வாகன ஓட்டுனர்கள் என்றால் அது நூற்றுக்கு 99 சதவீதம் ஆண்கள் மட்டுமே செய்து வருகின்றன. இவ்வாறான காலகட்டத்தில் பெண்கள் நினைத்தால் எதையும் சாதித்து காட்டலாம் எந்த பணியும் இழிவானது அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாய் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ரம்யா என்பவர் நிரூபித்து காட்டி பல பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் திகழ்ந்து வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ரம்யா. 32 வயதான இவர் ஐடிஐ படித்துள்ளார். இந்நிலையில் 2015-ஆம் ஆண்டு நான்குசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்ட தனது ஊரில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு அறிவிப்பு பத்திரிகையில் வெளிவந்தது. அதனை அறிந்த இவர், ஓட்டுநர் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அதற்கான தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வர, அதில் கலந்து கொண்டு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓட்டுநர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கான ஆணை கடிதத்தை பெற்று, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு டிரைவராக நியமிக்கப்பட்டார்.
இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் முதல் பெண் ஓட்டுநராக ரம்யா பணிபுரிந்து வருகிறார். தற்போது மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமிக்கு டிரைவராக பணிபுரியும் ரம்யா உற்சாகத்துடன் தன் ஓட்டுநர் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திய ரம்யாவின் தன்னம்பிக்கை அனைவரின் பாராட்டை பெற்று பெண்களிடையே தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மிகையாகாது. ரம்யாவுக்கு சந்தியாஸ்ரீ (13) என்ற மகளும், சந்தோஷ் (11) என்ற மகளும் உள்ளனர்.