கொரோனா முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்கள் 200 பேருக்கு தினமும் உணவு வழங்கிவருகிறது திருவாரூரை சேர்ந்த கலாம் நண்பர்கள் அமைப்பு. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கி இருக்கிறது.

 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு முதற்கட்டமாக தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத காரணத்தால் தமிழக அரசு சார்பில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மருந்தகங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்களை தவிர மற்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களின் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க அவர்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஊரக உள்ளாட்சி துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

அதன்படி காய்கறிகள், பழங்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மளிகை பொருட்களும் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் சாலையோரங்களில் வசிப்பவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என பலரும் முழு ஊரடங்கு காரணமாக போதிய உணவு கிடைக்காமல் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இறங்கி ஆதரவற்றவர்களுக்கு தேவையான உணவு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருகின்றனர்.

 

அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் திருவாரூர் கலாம் நண்பர்கள் என்கிற தன்னார்வ அமைப்பு ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. கலாம் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் மர்ஜுக் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் உள்ளிட்டோரின் முன்னெடுப்பு நடவடிக்கை காரணமாக அமைப்பை சேர்ந்த பல்வேறு நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவும் எண்ணம் உடையவர்களின் உதவியோடு பல்வேறு பொருட்களை உதவியாக பெற்று ஆதரவற்றவர்களுக்கு தினந்தோறும் இரண்டு வேளை உணவு வழங்கி வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, திருவாரூர், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், முதியவர்களுக்கு மதிய வேளையில் 150 முதல் 200 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி, லெமன் சாதம், புதினா சாதம் போன்ற ஏதாவது ஒரு வகையான உணவினை வழங்குகின்றனர். அதேபோல இரவு நேரங்களில் 150 நபர்களுக்கு மேலாக இட்லி போன்ற உணவு வகையை வழங்குகின்றனர்.

 

இந்த சேவையை கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து கலாம் நண்பர்கள் அமைப்பு செய்து வருகின்றது. மேலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த மனைவி அவர்களின் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு  தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் கலாம் நண்பர்கள் அமைப்பு வழங்கியுள்ளது. அதே போல தினசரி கொரோனா தடுப்பு இயற்கை மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் வழங்குதல்  மற்றும் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை  இயன்றவரை முகக் கவசங்கள் வழங்குதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

 

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காலகட்டத்திலும் இதே சேவையை  கலாம் நண்பர்கள் அமைப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய காத்திருப்பதாகவும் திருவாரூர் கலாம் நண்பர்கள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.