CM Stalin: தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:


இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்ற தமிழக மீனவர்களை விடுவிக்க  நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (15-3-2024) கடிதம் எழுதியுள்ளார்.


அக்கடிதத்தில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும், கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தான் கோரியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ள  முதலமைச்சர் ஸ்டாலின், இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்பிரச்னைகளுக்கு தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மீனவர்கள் கைது:


தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இன்று ஒரே நாளில் தமிழகத்தின் 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


நாகப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் இவ்வாறு இலங்கை கடற்படையின் கைதுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரும் காங்கேசன் துறை கடற்கரை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Kavitha Arrest: சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!


Lok Sabha Election 2024: சிதம்பரம், விழுப்புரத்தில் மீண்டும் வி.சி.க. போட்டி - வெளியானது வேட்பாளர் பட்டியல்?