கரூர் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தரவில்லை என்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.


 


 




 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் 16வது வார்டு ஜே.ஜே.கார்டன், ரேஷன் கடை சந்து உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி இல்லை எனக் கூறி பொதுமக்கள் காந்திகிராமம் E.B காலனி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


 




 


போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வார்டு கவுன்சிலர் பூபதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருபது ஆண்டுகளாக சாலை வசதியை அமைத்து தரவில்லை என கூறி, வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறினர். 


 


 




 


கரூர் மாநகராட்சி சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி என்பதால் நிதி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனவும், கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தரப்படும் என்று கவுன்சிலர் கூறிய போது, மற்ற பகுதிகளில் சாலைகள் அமைக்கும்போது தங்கள் பகுதிக்கு ஏன் வரவில்லை என பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தங்கள் பகுதியில் தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததோடு, சாலையை சமன்படுத்தி செம்மண் கொட்டி உள்ளனர். ஆனால், இதுவரை பணியை துவக்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.