MLC Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள், கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.


தெலங்கானாவில் கவிதா கைது:


டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில்  உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன் முடிவில் ஆந்திர மேலவை உறுப்பினரான கவிதா கைதாகியுள்ளார். இதையடுத்து அவர் விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், கவிதா கைது செய்யப்பட்டு இருப்பது தெலங்கானா அரசியல் முக்கிய சம்பவமாக கருதப்படுகிறது. இவரது கைது நடவடிக்கையை தொடர்ந்து பிஆர்எஸ் கட்சியினர் தெலங்கானாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


அமலாக்கத்துறை விளக்கம்:


கவிதாவை கைது செய்தது தொடர்பாக அமலாக்கதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (15 இன் 2003) கீழ் கவிதாவை கைது செய்வதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதின் போது கவிதாவின் சகோதரரும், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவருமான கே.டி. ராமாராவ், அமலாக்கத்துறை அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டார். உரிய ஆவணங்கள் இன்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், உச்சநீதிமன்றத்தில் தந்த வாக்குறுதிகளை மீறி நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டினார். அதோடு, உள்நோக்கத்துடன் வெள்ளிக்கிழமை அன்று வந்து கைது செய்துள்ளதாகவும் சாடியுள்ளார். இதனிடையே, கவிதாவை டெல்லி அழைத்துச் செல்வதற்காக பிரத்யேக விமானம் தயார் செய்யப்பட்டுள்ளது.


நீதிமன்றத்தில் வழக்கு:


டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதா மீது, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்தும், வழக்கில் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுதாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கெஜ்ரிவாலுக்கு சிக்கல்:


ஏற்கனவே, டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு எம்.பி கைது செய்யப்பட்டனர். அந்த அமைச்சர்கள் தங்களது பதவிகளையும் இழந்தனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக் கூறி, அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமால் அவர் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் தான், கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை விசாரணையையும், சோதனையையும் தொடர்ந்து வருகிறது.