தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


அமைச்சர் - எம்.பி. மோதல்:


பரிசளிப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வந்த பிறகும் நீண்ட நேரமாகியும் மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி வரவில்லை என்று கூறப்படுகிறது. தாமதம் ஆன காரணத்தால் விழாவை தொடங்குமாறு ராஜகண்ணப்பன் கூறியதாக கூறப்படுகிறது. விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நிகழ்ச்சிக்கு நவாஸ் கனி எம்.பி. வந்தார்.


தான் வருவதற்கு முன்பே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் இதுதொடர்பாக நவாஸ் கனி எம்.பி. மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டார். அப்போது, அவர் அருகில் நின்ற அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் – நவாஸ் கனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின்போது நவாஸ் கனி எம்.பி. அமைச்சரை பார்த்து தனது ஆட்காட்டி விரலை நீட்டி கோபத்துடன் ஏதோ கூறினார். அதற்கு அமைச்சரும் ஏதோ பதில் கூறினார்.






கீழே விழுந்த மாவட்ட ஆட்சியர்:


அமைச்சருடன் எம்.பி. நவாஸ்கனி வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் நவாஸ்கனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நவாஸ் கனி ஆதரவாளர்களும் அமைச்சரின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவின்போது இருதரப்பினரையும் சமாதனப்படுத்த முயற்சித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளி விட்டனர்.


இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அமைச்சர் மற்றும் எம்.பி.யின் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர். அமைச்சர் ராஜகண்ணப்பன் – நவாஸ் கனி வாக்குவாதத்தின்போது மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுதான் திராவிட மாடலா?


இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, திரைக்கு முன்னால் புன்னகை திரைக்குப் பின்னால் அடிதடி. இது தான் திமுக கூட்டணியின் உண்மை நிலவரம். திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் எம்.பி. நவாஸ் கனி இடையே நடந்த சண்டையில் மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகம் என்ற ஒன்று திமுக ஆட்சியில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியோ?”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க: அதீத காதலால் ஏற்பட்ட பெரும் சோகம்... இளம் தம்பதி அடுத்தடுத்த நாளில் தற்கொலை: பட்டுக்கோட்டையை உலுக்கிய சம்பவம்


மேலும் படிக்க: "பெண்கள் குட்டையான ஆடைகளை அணியக்கூடாது" : ஹிஜாப் பிரச்சனையில் தெலங்கானா அமைச்சர் மஹ்மூத் அலி!