ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில், போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. 






இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பிக்கு அழைப்புவிடுக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, நவாஸ் கனி எம்.பி விழாவில் கலந்து கொள்வதற்கு வருகை தந்தபோது, நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டு இருந்தது. 


இதனால் ஆத்திரமடைந்த நவாஸ் கனி எம்.பி. ஏன் நான் வருவதற்கு முன்பு நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதற்கு இடையே இதை விசாரிக்க வந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்க வேளையில் நவாஸ் கனி எம்.பி. மற்றும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. சிறிது  நேரத்தில் இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், இதை தடுக்க முயற்சி செய்த மாவட்ட ஆட்சியரும் கீழே தள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.