தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மனசு முழுக்க காதல் நிரம்பி வழிந்த இளம் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனைவி இறந்த அதே நேரத்தில் அவரை போலவே கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ் (28). பிரிண்டிங் பிரஸ்சில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவிதா (22). இருவருக்கும் கடந்த மே மாதம் 25ம் தேதி திருமணம் நடந்துள்ளது. 


இந்நிலையில், வழக்கம் போல சதீஸ் வேலைக்கு செல்லும் நேரத்தில் கூட, சுவிதா வாட்ஸ் அப்பில், அடிக்கடி காதல் தொடர்பான மெஜேஸ் அனுப்பி வந்துள்ளார். பதிலுக்கு சதீசும் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது நுாற்றுக்கும் அதிகமான முறை இருவரும் மாறி மாறி முறை ஐ லவ் யூ என்ற மெசேஜ் மேல் மெசேஜ் அனுப்பி கொண்டுள்ளனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத காதலில் இருந்துள்ளனர். 


இந்நிலையில் நேற்று சதீஸ் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு வந்துள்ளார். வேலைக்கு வந்த சில மணி நேரத்தில் சுவிதாவிடம் இருந்து சதீசுக்கு போன் வந்துள்ளது. அப்போது சதீஸை வீட்டிற்கு வர கூறி சுவிதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு நினைத்த நேரத்தில் வரமுடியாது என்று சதீஸ் தெரிவித்தாராம்.


பின்னர், மதியம் சுவிதா, சதீஸ்க்கு வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சதீஷிடம் கூறிவிட்டு சுவிதா வாட்ஸ் அப் வீடியோ காலை கட் செய்யாமல், மதியம் 3:45 மணிக்கு கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 


இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ், உடனே தனது வீட்டுக்கு அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது சுவிதா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனே சுவிதாவை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சதீஷ் சேர்த்துள்ளார். அங்கு சுவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து சோகமாக இருந்த சதீஸ் நேற்று இரவு 8 மணிக்கு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு சதீஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு சதீஷ் வெளியேறினார். 


பின்னர், வீட்டிற்கு சென்று தனது மனைவி சுவிதா இறந்த அதே நேரமான மதியம் 3:45 மணிக்கு சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் உடலை கைப்பற்றி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். 


இது தொடர்பாக பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., பொறுப்பு இலக்கியா நேரடியாக சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக சுவிதாவின் பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்த நாளில் அதீத காதலில் இளம் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.