தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி, பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஐதராபாத்தில் பெண்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதற்கு முன், ஹிஜாபை கழற்ற வேண்டிய நிபந்தனை ஏற்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் பதிலளித்தார்.


ஹிஜாபை கழற்றச்சொன்ன கல்லூரி நிர்வாகம்


ஹைதராபாத்தில் உள்ள கே.வி.ரங்கா ரெட்டி மகளிர் பட்டயக் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை தேர்வு மையத்திற்கு வந்தபோது, முதலில் தேர்வு அறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். பின்னர், ஹிஜாபை கழற்றிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.






பெண்கள் குட்டையான ஆடைகளை அணிந்தால் பிரச்சனை


இந்த சம்பவம் குறித்து பதிலளித்த முகமது மஹ்மூத் அலி, பெண்கள் முடிந்தவரை தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். கே.வி.ரங்கா ரெட்டி கல்லூரியில் நடந்த பிரச்னை குறித்து அவரிடம் கேட்டபோது, "பெண்கள் குட்டையான ஆடைகளை அணிந்தால் பிரச்னைகள் ஏற்படும். எங்கள் கொள்கை முற்றிலும் மதச்சார்பற்ற கொள்கை. ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பியதை அணிய உரிமை உண்டு," என்றார்.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: குஷியான செய்தி மக்களே.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..


மத பாரம்பரியத்தை பின்பற்றவும் 


மேலும், "ஆனால், குறிப்பிட்ட நபர் இந்துவாகவோ அல்லது இஸ்லாமியராகவோ இருந்தால் அதற்கு ஏற்ப முறைப்படி ஆடை அணிந்து பழக வேண்டும், ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது. நமது ஆடை கலாச்சாரத்தை மதிக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் குட்டையான ஆடைகளை அணியக்கூடாது, முடிந்தவரை தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்," என்று முகமது மஹ்மூத் அலி கூறினார்.






இந்த பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்


நாங்கள் பிரச்சனையை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுப்போம் என்று அவர் மேலும் கூறினார். சுமார் அரை மணி நேரம் தேர்வு அறைக்கு வெளியே காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். இறுதியில் பரீட்சை எழுத ஹிஜாபை கழற்ற வேண்டியதாயிற்று என்றும் கூறினர். "நாளை முதல் ஹிஜாப் அணிய வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இது தேர்வு விதிகளுக்கு எதிரானது. இது தொடர்பாக எங்கள் பெற்றோர் உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலியிடம் புகார் அளித்துள்ளனர். பர்தா அணிந்த மாணவிகளை மையத்திற்குள் அனுமதிக்காதது சரியல்ல என அவர் எங்களிடம் தெரிவித்தார்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.