தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கன கன மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று மிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் மழையானது சென்னைவிட்டு நகர்ந்து செல்கிறது என குறிப்பிட்டுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ அதிகப்படியான மழை திருப்பூர் - கோவை பகுதியில் இருக்கும். கன முதல் மிக கன மழையாக இருக்கும்.  அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று மழை கொட்டித்தீர்க்கும். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளக்காடாக மாற உள்ளது.


திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் நல்ல மழை இருக்கும். மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதனால் முடிந்தவரை இந்த மழையை மக்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


மே மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. கத்திரி வெயிலின் போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த ஆண்டு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கடந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பதிவான மழையின் அளவு (மில்லி மீட்டரில்):
அதிராமபட்டினம் 153.0 மி.மீ, கடலூர் 93.0 மி.மீ,  வால்பாறை 78.0 மி.மீ, புதுச்சேரி 69.0 மி.மீ, பாம்பன் 59.0 மி.மீ, கன்னியாகுமரி 54.0 மி.மீ, பாளையம்கோட்டை 47.0 மி.மீ, சேலம் 42.0 மி.மீ, மீனம்பாக்கம் 38.2 மி.மீ, நுங்கம்பாக்கம் 32.1 மி.மீ, திருச்சிராப்பள்ளி 30.0 மி.மீ, திருப்பத்தூர் 15.0 மி.மீ, கொடைக்கானல் 14.0 மி.மீ, கோவை 11.0 மி.மீ, ஊட்டி 14.0 மி.மீ, நாகப்பட்டினம் 6.0 மி.மீ, டோண்டி 5.0 மி.மீ, குன்னூர் 3.0 மி.மீ, அரியலூர் 1.2 மி.மீ, கரூர் பரமத்தி 1.0 மி.மீ, காரைக்கால் 2.0 மி.மீ, வேலூர் 0.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


Rain: அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?