பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம்:
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று கொழும்பில் இருந்து வந்த ஆண் பயணியிடம் சோதனை நடத்தினர். இதில், அவரது உடலில் பசை வடிவில் மறைத்து வைத்திருந்த நான்கு கட்டுகள் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 49.35 லட்சம் ரூபாய் மதிப்புடைய 919 கிராம் எடை தங்கம் கைப்பற்றப்பட்டது. பின்னர், அப்பயணி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி, குவைத்திலிருந்து வந்த ஒரு பெண் பயணியிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 கேரட்டிலான 20 தங்க வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கைப்பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட 805 கிராம் எடையிலான 43.23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
சென்னை விமான நிலையத்தில் தொடரும் கடத்தல்:
கடந்த மாதம் 17ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தில் அபுதாபியில் இருந்து வந்த ஆண் பயணியிடம் சுங்கத்துறையினர் மேற்கொண்ட சோதைனையில் பசை வடிவில் இரண்டு கட்டுகள் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 24 கேரட்டிலான 699 கிராம் மற்றும் 93 கிராம் தங்கக்கட்டிகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. மொத்தம் 792 கிராம் எடையுள்ள இவற்றின் மதிப்பு 42.38 லட்சம் ரூபாய் ஆகும்.
இவை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் கூடுதல் ஆணையர் கே.பி.ஜெயகர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலாக, சென்னை விமான நிலையத்தில் நடக்கும் கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட, சென்னை விமான நிலையத்தில் 3 பெண் பயணிகளிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,209 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பு, பாங்காக்கிலிருந்து 3 பேர் கடத்தி சென்ற தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, தங்கம் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வனவிலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன.
நாளுக்கு நாள் புது புது விதமான நவீன முறையில் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் 2021ஆம் ஆண்டைவிட 2022ஆம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டது கவலையை ஏற்படுத்தியது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை, சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 94.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் கடத்தல் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டனர். துபாய், சார்ஜா, குவைத், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அதிகமாக கடத்தி வரப்படுகிறது.