செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர், அச்சரப்பாக்கத்தில் விஷ சாராயம் மரண வழக்குத் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. இரண்டு கொலைவழக்குகளை பதிவு செய்துள்ளது.
22 பேர் உயிரிழப்பு:
விஷச்சாராயம் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. விஷச்சாராயம் தொடர்பான மேலும் 4 வழக்குகளையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு சிபிசிஐடி அதிகாரி மகேஷ்வரி டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 10 லட்சம் நிவாரணமாக அறிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விழுப்புரம், செங்கல்பட்டு விஷ சாராய வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அண்மையில் பலர் விஷச் சாராயம் அருந்தியுள்ளனர். இந்நிலையில் மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, ஆலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற விஷ சாராயம் என்று டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்தார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர்.
விஷச்சாராயம்:
டிஜிபி சைலேந்திர பாபு இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெரிவிக்கப்பட்டதாவது: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம், தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையில், அது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷ சாராயம் என்பதும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாலும், சிலர் தொழிற்சாலைகளில் இருந்து விஷ சாராயத்தை திருடி விற்றுள்ளனர். அதனால் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. மெத்தனால் என்ற விஷ சாராயம் எந்த தொழிற்சாலையில் இருந்து வாங்கப்பட்டது, அதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க