ஐபில் தொடரில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியில் இன்று மோத உள்ள நிலையில், முந்தைய போட்டிகளில் யார் கை ஓங்கியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


எலிமினேட்டர் போட்டி:


ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்று தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்து முடிந்த முதல் குவாலிபையர் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, அகமதாபாத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள குஜராத் அணியுடனான இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மோத உள்ள அணி யார் என்பதை உறுதி செய்யும், எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெற உள்ளது.


லக்னோ - மும்பை பலப்பரீட்சை:


புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடித்த லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள், இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம். முன்னதாக, ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டிகளில், லக்னோவின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.


மும்பையின் மோசமான வரலாறு:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 3 முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆனால், அந்த 3 போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடப்பாண்டில் இரு அணிகளும் விளையாடிய லீக் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் லக்னோ அணி தான் முதலில் பேட்டிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றைய போட்டியில் வென்று அதற்கு பழிவாங்க மும்பை அணி முனைப்பு காட்டி வருகிறது. 


ஸ்கோர் விவரங்கள்:


லக்னோ அணிக்கு எதிராக மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 181


மும்பை அணிக்கு எதிராக லக்னோ அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 199


லக்னோ அணிக்கு எதிராக மும்பை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 132


மும்பை அணிக்கு எதிராக லக்னோ அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 177


தனிநபர் சாதனை:


லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன் சேர்த்த மும்பை வீரர் - ரோகித் சர்மா, 82 ரன்கள்


மும்பை அணிக்கு எதிராக அதிக ரன் சேர்த்த லக்னோ வீரர் - கே.எல். ராகுல், 106 ரன்கள்


லக்னோ அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த மும்பை வீரர் - பெஹ்ரெண்ட்ரோப், 2 விக்கெட்கள்


மும்பை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த லக்னோ வீரர் - ரவி பிஷ்னோய், 4 விக்கெட்கள்