புதுச்சேரி போன்று தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா வகை H3N2 காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக பரவக்கூடிய மழைக்கால காய்ச்சல் குறைவாக இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், கூட்ட நெரிசல்களில் செல்வதாலும், எல்லா பக்கமும் சாதாரண வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை சீசன் அறிகுறி தொடங்குவதற்கு முன் மற்றும் பின் நாட்களில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் பொருட்டு, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மார்ச் 16 முதல் 26ஆம் தேதி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
இதையடுத்து தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், புதுச்சேரியை போன்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை எனவும் அதனால் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றமோ, பயமோ அடைய வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 4 Result: முடிவுக்கு வந்த 8 மாதக் காத்திருப்பு- குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு- பார்ப்பது எப்படி?
TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி!
12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
சமீபத்திய கல்வி செய்திகளை அறிய Abp Nadu-இல் கல்வி செய்திகள் (Education news) என்ற பக்கத்தைப் பின்தொடரவும்.