திருச்சி சிவா எம்.பி. வீடு மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ள திட்ட பணிகளையும், முடிவுற்ற திட்ட பணிகளையும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் எம்.பி., சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீடு உள் நியூ ராஜா காலனி வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர்.
அரசு திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், எம்பி சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அதனால், அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகையால் அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மட்டும் வீட்டு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இது குறித்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட ஆதரவாளர்கள் 10 பேரை பிடித்து விசாரித்து வருகிறதாக சொல்லப்படுகிறது. திருச்சியில் திமுக எம்.பி . வீட்டில் திமுக அமைச்சரின் ஆதரவாளர்களே வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பினருக்கிடையே தாக்குதலை தடுத்தபோது காவலர் சாந்திக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு நிலவுகிறது. திமுக கட்சியில் நீண்ட ஆண்டு காலமாக இருக்கும் அமைச்சர் கே. என். நேருக்கும், திருச்சி சிவாவிற்கும் கூறப்படும் மோதல் சம்பவம் அக்கட்சியின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.