TN Headlines Today:  



  • மீண்டும் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்..


அதிமுகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் மைத்ரேயன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். 


மைத்ரேயன் அரசியல் பயணம்:


மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ராத்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார். 1995 முதல் 1997 வரை பாஜகவின் தமிழ்நாடு பொதுச்செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் இவர் பாஜகவிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். கடந்த 23 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து அரசியலில் இருந்து பயணித்து வந்தவர் தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும் வாசிக்க.



  • விவசாயிகளின் உரிமைகளை அரசு விட்டுக் கொடுக்காது.. டெல்டாவில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்


காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தஞ்சை டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக  மேட்டூர் அணை வரும் 12ஆம்  தேதி திறக்க உள்ளது. இதனால் கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல 90 கோடி ரூபாய் செலவில் பாசன ஆறுகள் தூர்வாரப்பட்டு வருகின்றது.  திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் வாசிக்க



  • ஜுன் 13ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்


அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜுன் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், காலை 10.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்க உள்ளார்.


திட்டம் என்ன?


அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தி, அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை எதிர்கொள்வதற்கு என்ன மாதிரியான யூகங்களை வகுக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் சட்டத்திட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது குறித்தும் பேசப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. அதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் வாசிக்க..



  • வானிலை அறிவிப்பு


நேற்று (08.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிப்பர்ஜாய்” இன்று  (09.06.2023)  காலை 08:30 மணி அளவில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார்  800 கிலோமீட்டர் தொலைவில்,  மும்பையில் இருந்து  மேற்கு-தென்மேற்கே சுமார்  820  கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து  தென்-தென்மேற்கே சுமார்  830  கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று,   அடுத்த 36மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த 48  மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.


 வெப்பச்சலனம் காரணமாக, 09.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


10.06.2023 முதல் 12.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வாசிக்க..