அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜுன் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், காலை 10.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்க உள்ளார்.


தலைமைக் கழக அறிக்கை:


இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 13.06.2023 - செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.


ஒரு மாதத்திற்குள்ளாகவே மீண்டும் கூட்டம்:


கடந்த மாதம் 17ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் அதிமுகவும் தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட தொடங்கியுள்ளது.


திட்டம் என்ன?


அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தி, அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை எதிர்கொள்வதற்கு என்ன மாதிரியான யூகங்களை வகுக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் சட்டத்திட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது குறித்தும் பேசப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. அதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஈபிஎஸ் தரப்பு:


மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் போது, கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளும் தொண்டர்களை கேட்டு எடுக்க முடியாது எனவும், கட்சி ஒருங்கிணைப்பாளரை காட்டிலும் கட்சி பொதுக்குழுவிற்கே அதிகம் பலம் உள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது. அதோடு, ஓபிஎஸ் தரப்பின் செயல்பாடுகளால் கட்சி முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.