தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடப்பாண்டு 12 மாவட்டங்களில் தூர் வாருவதற்காகத் தமிழக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அத்தியாவசியமான மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இம்முறை மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்தது. தொடர்ந்து பல இடங்களில் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 5ம் தேதி புதுக்கேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடந்த பின்னர் மறுநாள் டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தால் ஆய்வுப்பணி தள்ளி வைக்கப்பட்டது.
பாசனத்திற்காக மேட்டூர் அணையில் வரும் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ. 20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில் ஒரு சில பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சை வந்தார். தஞ்சைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் தலைமையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகில் 500 க்கும் மேற்பட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் பழநிமாணிக்கம், மயிலாடுதுறை ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் சாக்கோட்டை க.அன்பழகன், கா.அண்ணாதுரை, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி மற்றும் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நேற்று இரவு தஞ்சை சுற்றுலா மாளிகையில் தங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தஞ்சை அருகே ஆலக்குடியில் முதலைமுத்து வாரியின் எல்லை 11.800 கி.மீ முதல் 15.300 கி.மீ வரை மொத்தம் 3.50 கி.மீ தூரம் ரூ.20 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது. இப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பூதலூர் அருகே உள்ள விண்ணமங்கலம் சி பிரிவு வாய்க்கால் 920 மீட்டர் தூரம் ரூ.34 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இப்பணிகளையும் முதன் முதல்வர் மு. க .ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் தஞ்சை வருகையை ஒட்டி மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் நால் ரோட்டில் பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக வலியுறுத்தி சிறுமி ஒருவர் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் சிறுமிக்கு சாக்லேட் வழங்கினார் அதனை சிறுமி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.