காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தஞ்சை டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக  மேட்டூர் அணை வரும் 12ஆம்  தேதி திறக்க உள்ளது. இதனால் கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல 90 கோடி ரூபாய் செலவில் பாசன ஆறுகள் தூர்வாரப்பட்டு வருகின்றது.  திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ‘டெல்டா மாவட்ட உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்.  விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தில் நெல் உற்பத்தியில் சாதனைப் படைப்பார்கள் என நம்புகிறேன். இதுவரை 96% தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய பணிகளும் விரைவில் நிறைவடையும். 2022-23 ஆம் ஆண்டில் காவிரி பாசன பகுதிகளில் தூர்வாருவதற்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


தற்போது 90 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து வருகிறது. உழவர்களுக்கான இடுபொருட்களும், கூட்டுறவு வங்கி கடன்களும் முழுமையாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளேன்” என தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், “கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தற்போது அமைந்துள்ள புதிய காங்கிரஸ் அரசு மட்டுமல்ல, முந்தைய அரசுகளும் அணை கட்டுவோம் என சொல்லியது. அப்போதும் நாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இந்த ஆட்சி அதனை தொடர்ந்து செய்யும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.