ரவுடிகள் மற்றும் கூலிப் படைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கை மற்றும் 12,819 கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணம் செய்தல் என நகர்ப்புற தேர்தல் அனைத்தும் அசம்பாவிதங்களின்றி சிறப்பாக நடந்து முடிந்தன.
சிறிய பிரச்சினைகள் எழுந்தபோது, அவற்றை தைரியமாகவும், சமயோஜிதமாகவும் காவல்துறை எதிர்கொண்டது. இதற்காக இரவும் பகலும் அயராது பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
பின்வரும் பணிகள் நாம் இன்றைய பொழுது மேற்கொள்ள வேண்டியுள்ளது:
1. வன்முறையாளர்கள், கூலிப் படையினர், கொலைக் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடித்து விரைவில் தண்டனை பெற்று, அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
2. கண்டுபிடிக்கப்படாமல், நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள திருட்டு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.
3. தொடர்ந்து தவறு செய்யும் ரௌடிகளை மாவட்ட வருவாய் அதிகாரி முன் ஆஜர்படுத்தி நல்லொழுக்கப் பத்திரம் பெற வேண்டும். மீறுபவர்கள் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
4. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களை அன்றாடம் கண்காணிக்கப்படுதல் வேண்டும். இவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்கப்பட வேண்டும்.
5. அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
6. வாகன விபத்துகளைக் குறைக்க செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
7. குற்றவாளிகளின் புகைப்படங்களை, காணொலிகளை ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவர்களை பிற்காலங்களில் அடையாளம் காண இது உதவியாக இருக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்