TN Corona LIVE Updates : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 24 May 2021 10:37 PM
கர்நாடகா கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது போலவே, கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்துள்ள 8 மாநிலங்களில் கர்நாடகவும் ஒன்றாகும். அந்த மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25 ஆயிரத்து 311 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 50 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 57 ஆயிரத்து 333 நபர்கள் நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 25 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமலில் இருந்த நிலையில், இன்று முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், இன்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 34 ஆயிரத்து 867 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 985 ஆக குறைந்துள்ளது. இன்று சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 29 ஆயிரத்து 882 ஆக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 151 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 13 ஆயிரத்து 207 நபர்கள் ஆவார்கள். பெண்கள் 7 லட்சத்து 63 ஆயிரத்து 966 ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்38 ஆக பதிவாகியுள்ளது. இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 421 நபர்கள் ஆவர். பெண்கள் 15 ஆயிரத்து 446 நபர்கள் ஆவர். இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா உயிரிழப்பு மிகுந்த கவலை அளிக்கும் விதமாக பதிவாகி வந்தது. அதிகபட்சமாக சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 467 நபர்கள் உயிரிழந்தனர். ஆனால், பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கிய கொரோனா உயிரிழப்பு இன்று 404 ஆக குறைந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 177 பேர் தனியார் மருத்துவமனையிலும், 227 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆவார். மேலும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 460 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்திற்கான குறைவான அளவு தடுப்பூசிகள் ஒதுக்கீடு - மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என்று மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில், தமிழகத்திற்கு குறைந்த அளவிலே  தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசியின் அளவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  

சிங்கப்பூர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நாளை சென்னை கொண்டு வரப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தளர்வில்லாத ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு, அரசின் சார்பில் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று  தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் 535 நடமாடும் கடைகள் மூலமாக காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. விற்பனை விலையை கண்காணிக்க திட்ட அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளது. மகாராஷ்ட்ரா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருநது 120 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


ஊரகப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக இருப்பதால் அங்கும் கொரோனா பாதுகாப்பு மையங்கள் படுக்கை வசதிகளுடன் புதியதாக ஏற்படுத்தப்பட உள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பது குறித்து கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.


காய்கறி விற்பனையை கண்காணிக்க வட்டார அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, வேளாண்துறை வணிகவரித்துறை குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மினி ஆட்டோ செல்ல முடியாத இடங்களிலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


காய்கறி விற்பனையைத் தொடர்ந்து மளிகை தொகுப்பு வழங்குவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் ஊரடங்கு குறித்து அச்சப்பட தேவையில்லை. தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


காய்ச்சல் வருவதை முன்கூட்டியே கண்டறிய திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் மனதில் தடுப்பூசி செலுத்துவதற்கான தயக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


ஏற்கனவே சீனாவில் இருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 திரவ ஆக்சிஜன் கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் திட்டமிட்டபடி சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோல, சிங்கப்பூரில் இருந்து 1,500 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கப்பல் மூலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவை சென்னைக்கு நாளை வந்தடையும்.


மேலும், தைவானில் இருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டு வரப்பட உள்ளது.”


இவ்வாறு அவர் கூறினார்.  


 


 


 


 


 

தமிழகத்தில் 890 மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போர் பெரும்பாலோனார் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பதால், தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நிறுவனத்தில் புதிய ஆக்சிஜன் படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “ முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கு இலவச சிகிச்சை பெறும் அரசாணணை வெளியிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு கட்டணம் என்ன என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 890 மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, 890 மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் எந்த மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரத்தையும், கட்டணத்தையும் குறிப்பிட்டு எழுதி போர்டு வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் சார்பில் காப்பீடுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பதாக புகார் வந்தால் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். கொரோனா முதல் அலையில் 13 சதவீதம் வரை தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் 7 லட்சம் தடுப்பூசிகளை அரசு கையில் வைத்துக்கொண்டு போடாமல் உள்ளது என்று தவறான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். தமிழக அரசிடம் 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதையும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பியுள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை பயன்படுத்துகிறோம். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்திற்கு வரும் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. ‘ இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கு அதிகமாக பதிவாகியிருந்தது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் கடந்த சில 4 தினங்களாக 400க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இறங்கு முகத்தில் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கையை எடுத்து வரும் தமிழக அரசு, தமிழகத்திலே ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

10 மாநிலங்களில் 66 சதவிகித டோஸ்கள் போடப்பட்டுள்ளன

நாடுமுழுவதும் செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசிகளின்  எண்ணிகையில் 66 சதவிகிதம் 10 மாநிலங்களில் நிர்வகிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டுள்ளன: 


இதுநாள் வரையில் தமிழகத்தில் 74 லட்சம் டோஸ்கள் (74,03,363) டோஸ்கள் போடப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கையில் 3.8% டோஸ்கள் மட்டுமே நிர்வகிக்கப்பட்டுள்ளன.        


 


18-44 வயது பயனாளிகள் தடுப்பூசி நிலவரம்

இந்தியாவில் 18-44 வயதுப் பிரவினரில் 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 53,216 ஆக உள்ளது.     


 


12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் நிதியுதவி

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு செவிலியர் சங்கத்தை சார்ந்த 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியம் 56 இலட்ச ரூபாயை வழங்கியுள்ளனர்.    

15 ஆயிரத்து 284 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது - ரயில்வே அமைச்சகம்

நாடுமுழுவதும் இதுவரை 15 ஆயிரத்து 284 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ரயில்வே துறை விநியோகித்துள்ளது. இதுவரை 234 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் யக்கப்பட்டு, இதன்மூலம் 936 டேங்கர்களில் 15 ஆயிரத்து 284 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 18-44 வயது பயனாளிகளுக்கு தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் 18-44 வயது பயனாளிகளுக்கு  இன்று முதல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்படுகிறது. பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.       

நடமாடும் காய்கறி வண்டி இன்றைய காய்கறி தொகுப்பு விலைப்பட்டியல்

உணவகங்களில் நேரக்கட்டுப்பாடுகளுடன் கூடிய பார்சல் சேவை தொடரும்

சென்னை தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும்.


தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


மின்னணு சேவை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


உணவகங்களில் நேரக்கட்டுப்பாடுகளுடன் கூடிய பார்சல் சேவை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்படும்.

கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் - முதல்வர் வேண்டுகோள்




முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     

கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் - முதல்வர் வேண்டுகோள்


முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     

இந்து நாளிதழ் செய்தியாளர் பிரதீப் குமார் உயிரிழந்தார்

இந்து நாளிதழ் செய்தியாளர் பிரதீப் குமார் கொரோனா நோய்த் தொற்று காரணமாக  உயிரிழந்தார். அவருக்கு வயது 29.


பத்த்ரிகையாளர்கள் 'முண்களப் பணியாளர்கள்' என்பதற்கான அரசாணையை விரைந்து வெளியிட்டு, இதுவரை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.   

ஒரு டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டால் வெறும் 33% பாதுகாப்பு

இங்கிலாந்து நாட்டின் Public Health England என்ற அரசு முகமை வெளியிட்ட ஆய்வில்,    


"பிஃபிசர் - பயோஎன்டெக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட 14 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் அதிகப் பரவலை ஏற்படுத்தும் புதிய வகை உருமாறிய பி.1.617 தொற்றுக்கு  எதிராக 88 சதவீத செயல்திறனையும், அதே சமயம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 93%  செயல்திறனையும் கொண்டுள்ளது.   


அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இரண்டு டோஸ் தடுப்பூச்சி,  பி.1.617 தொற்றுக்கு எதிராக 60 சதவீத செயல்திறனையும், பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 66% செயல்திறனையும் கொண்டுள்ளது.  


முதல் டோஸ் எடுத்துக் கொண்ட 3 வாரங்களுக்குப் பிறகு, பி.1.617 தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறன்  33 சதவிகிதமாக உள்ளது. அதே சமயம், பி.1.1.7 தொற்றுக்கு எதிரான  செயல்திறன் 50 சதவிகிதமாக உள்ளது" என்று கண்டறியப்பட்டுள்ளது.     

மே மாதத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகம்

இந்தியாவில் கடந்த 26 ( ஏப்ரல் 27 - மே 23) நாட்களில் மட்டும் 1,02,564 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 12  நாட்களில் இதில் 50% உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



      

18 மாநிலங்களில் புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்

நாடு முழூவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18 மாநிலங்களில் புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக , கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 31,034  சரிந்துள்ளது. 


தமிழகம், அசாம், ஓடிசா, ஆந்திர பிரதேசம், திருப்பூரா ஆகிய 10 மாநிலங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது.  


தமிழகத்தின் நேற்றைய புதிய பாதிப்புகள்: 35,483


குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 25,196


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 10,287 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.    

Background

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,40,842 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,55,102 பேர் குணமடைந்துள்ளனர்.


இதன் மூலம் நம் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,25,467 ஆக இன்று பதிவாகியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 88.30 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.    

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.