பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை 5 ஆயிரம் ரூபாய் மற்றும் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தால் இழப்பீட்டு தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.
மக்களுக்கும், அரசுக்கும் இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கி வரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை/ மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை/ இலவச பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்ந்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை பரிசீலித்த முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்தில் இருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்று காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள முதல்வர் இந்த தருணத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். கொடிய நோயான கொரோனாவுக்கு பத்திரிகையாளர்களும் உயிரிழப்பது சமீபத்தில் அதிகரித்து வருவது பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.22 லட்சம், நேற்று 1.96 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.08 லட்சமாக அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். முன்களப்பணியாளர்களான செய்தியாளர்கள், தங்களின் குடும்பத்தை மறந்து பொதுப்பணியாற்றுகின்றனர். அவர்களின் குடும்ப நலன் கருதி அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பை பல செய்தியாளர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.