காஞ்சிபுரம், ஈரோடு, செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஓர் ஆண்டு சிஆர்ஆர்ஐ ( Compulsory Rotatory Residential Internship Training) பயிற்சியை முடித்த அயல் நாடுகளில் மருத்துவம் படித்த 80 மாணவர்களை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் பணியமர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. 


முன்னதாக, மருத்துவக் கல்வி இயக்குநரகம், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், "கொரோனா பெருந்தொற்று காலத்தில் , உள்ளிருப்பு பயிற்சியில் சுழற்சி முறையில் பயிற்சி பெற்ற மருத்துவ உள்ளுறைவாளர்கள் (Medical Interns) யாரும் அவரச சிகிச்சைப் பிரிவில் பணியமர்த்தப்படவில்லை. மேலும், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் தற்போது  கொரோனா நோய்த் தொற்று மேலாண்மையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில்  உள்ளிருப்பு பயிற்சி முடித்த மருத்துவர்களின் பற்றாக்குறை  நிலவுவதால், ஒரு முறை வாய்ப்பாக  அயல் நாடுகளில் மருத்துவம் படித்த 80 மாணவர்களை உடனடியாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி அமர்த்திட ஆவணம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தது. 


இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு இதுகுறித்த உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளிருப்பு பயிற்சி பெற்ற 80 மாணவர்களில், 25 பேர் சென்னை மருத்துவக் கல்லூரியிலும், 25 பேர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், 15 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 15 பேர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையிலும் பணி அமர்த்தப்படுவதாக தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்தது. 



முன்னதாக, கொரோனா பெருந்தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நீட் (முதுகலை) 2021 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. 2021 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தத் தேர்வு நடத்தப்படாது என்றும்,  தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு பிறகே தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.   


  மேலும், நீட் முதுகலை தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை  மாநில அரசுகள் அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது. 


மேலும், ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் கொரோனா நோய்த் தடுப்பு  மேலாண்மையில் மருத்துவ உள்ளுறைவாளர்களை, உள்ளிருப்பு பயிற்சியின் சுழற்சி முறையில் மாநில அரசுகள்  நியமிக்கலாம் என்றும் தெரிவித்தது. 



தற்போது, ஆசிரியர்களின் முறையான பயிற்சி மற்றும் கண்காணிப்பின் கீழ் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள்,  தொலை மருத்துவ சேவை மற்றும் லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு‌ சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.    


குறைந்தபட்சம்  100 நாட்கள் கொரோனா சிகிச்சை பணியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு, எதிர்வரும் முறையான அரசு பணியமர்த்துதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.