கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் எனக் கூறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.


டெல்லியில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அவர் இதைக் கூறினார்.முதலாவது, இரண்டாவது அலைகளில் குழந்தைகள் எப்போதும்போல பாதுகாக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி தொற்று ஏற்பட்டவர்களுக்கும் லேசான அளவிலேயே பாதிப்பு இருக்கிறது என்றார் அவர்.    


இதேவேளை, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கல்வியில் கடைப்பிடிக்கப்படும் பாலினப் பாகுபாடு, மன அழுத்தம், மற்ற மனச் சிக்கல்கள், அதீத செல்போன் பயன்பாடு/ போதை, வழக்கமான கல்விச் செயல்பாடுகள் முடக்கம் ஆகியவற்றால் கூடுதல் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன என்று குலேரியா தெரிவித்தார். குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


” கொரோனா தொற்றின் முதலாம், இரண்டாம் அலைகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. குழந்தைகள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டாலும் அது லேசான அளவில்தான் இருக்கிறது. மேலும் கொரோனா கிருமி மாற்றம் அடையவில்லை. ஆகையால் மூன்றாவது அலையின்போது குழந்தைகள் அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.“ என்றவர்,
ஒரு கருதுகோளின் அடிப்படையிலேயே இப்படி ஒன்றை ஒரு சாரார் சொல்கின்றனர் என்றும் கூறினார்.

 

அதாவது, கொரோனா கிருமியானது மனித உடலில் இருக்கும் ஏசிஇ எனப்படும் ஏற்பிகள் மூலம் உடலுக்குள் நுழைகிறது; பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு இந்த ஏற்பிகள் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு குறைந்த அளவிலேயே தொற்று ஏற்படுகிறது என்பதை குலேரியா சுட்டிக்காட்டினார்.


இந்தக் கருதுகோளை முன்வைத்தவர்கள், குழந்தைகள் இதுவரை பாதிக்கப்படவில்லை; இதனாலேயே மூன்றாவது அலையின்போது அவர்கள் அதிக எண்ணிக்கையிலும் கடுமையாகவும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறுவதை குலேரியா ஏற்கவில்லை. அதற்கான சான்று எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

ஆனால், இதையொட்டி கவலைதெரிவித்துள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மூன்றாவது அலையின்போது பச்சிளம் குழந்தைகளையும் குழந்தைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.


மத்திய நலவாழ்வுத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூசணுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கணூங்கோ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தேசிய அவசர ஊர்திப் போக்குவரத்தை அதற்கேற்ப தயாராகவைத்துக்கொள்ளவும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான அவசர ஊர்தி வசதியை ஏற்பாடுசெய்யவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலையிலும் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தான் தற்போது இந்த கருத்து எழுந்துள்ளது.