தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உள்பட அனைத்து பள்ளி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், 10-ஆம் வகுப்பு முடித்தபிறகு பாலிடெக்னிக் கல்லூரி சேரும் மாணவர்களின் சேர்க்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “கொரோனா காரணமாக இந்தாண்டு மாணவர்கள் 11ம் வகுப்பில் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்களோ, அதே அடிப்படையில் முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதாவது, அந்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களைப்போலவே, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைகழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்டுள்ள நியமனத்தில் தவறுகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து பேசி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும். பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வரிடம் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த வாரம் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிப்பதற்காக உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைகழக துணை வேந்தர் உள்ளிட்ட பலரை உள்ளடக்கிய சிறப்பு குழு ஒன்றையும் தமிழக அரசு நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மாதம் 36 ஆயிரம் என்ற அளவில் தினசரி பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், தற்போது 15 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. தமிழக அரசு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முயற்சித்த நிலையில், சி.பி.எஸ்.இ. அமைப்பு 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் தமிழக அரசும் பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்கு பின்னர் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : TamilNadu Corona Vaccination : இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்..!