சென்னையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ்நாட்டிற்கு நேற்று மாலை வரை 3 லட்சத்து 65 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி இரவே முடிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 1 லட்சத்து 26 ஆயிரம் கோவாக்சின், 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளன. எனவே, ஏற்கனவே உள்ள 1 கோடியே 6 லட்சம் தடுப்பூசிகளுடன் சேர்த்து, இன்றைக்கு நான்கே கால் லட்சம் அளவு தடுப்பூசிகள் வர உள்ளன. எனவே, 1 கோடியே 10 லட்சம் என்ற அளவில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.


ஏற்கனவே, 98 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும் நிலையில், இன்று தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், இன்று பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலை வரும்.  சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். 21 லட்சத்து 63 ஆயிரம் நபர்கள் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.


முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப கோயம்பேடு மார்க்கெட்டில் பலதரப்பட்ட வணிகர்களுக்கு மாநகராட்சி, சுகாதாரத்துறை, சி.எம்.டி.ஏ. இணைந்து தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெறுகிறது. நேற்று மாலை வரை 9 ஆயிரத்து 550 நபர்களுக்கு இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும். இதனால், அகில இந்திய அளவில் அதிகமானோர் ஒரே இடத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்ற பெருமையை கோயம்பேடு மார்க்கெட் அடையும்.




காசிமேடு துறைமுக பகுதியில் 2 ஆயிரத்து 500 பேருக்கும், சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடியில் 100-க்கும் மேற்பட்டோருக்கும் என கோயம்பேடு மார்க்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. குணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொத்தமாக 50 ஆயிரத்து 197 படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தடுப்பூசிகள் வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தவுள்ளார். கொரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் அதே அளவில் இருக்கிறது என எடுத்துக்கொள்ள முடியாது. உயிரிழப்புகள் குறைகின்றன. உயிரிழப்பு இன்னும் குறைய வாய்ப்புள்ளது. கொரோனாவை தாண்டி பல்வேறு பாதிப்புகளை கொண்டவர்களால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. எப்படி இருந்தாலும், மரணம் என்பது மனதை உருக்குகிற செயல்தான். அது குறைய வேண்டும்” என்று கூறினார்.