தமிழ்நாட்டில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு #COVID19 நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணையாக தலா ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்-2021 தொடர்பாக வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும்  கலைஞர் பிறந்த நாளன்று  ரூ.4000/-வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


முத்துவேல் கருணாநிதியாகிய அவர்... பெண்ணினத்தின் காவலர் ஏன்?



2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்கப்பட்டது. 


ஊரடங்கை நீக்கலாமா? கொரோனா எண்ணிக்கை சொல்வது என்ன?


இந்நிலையில், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்ததினத்தை முன்னிட்டு, கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சமூக விலகலை பராமரிக்கும் வகையில் தெருவாரியாக சுழற்சி முறை அடிப்படையில், 200 டோக்கன்கள் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் 1மீ இடைவெளியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.






மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்க கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர்  தொடங்கி வைத்தார். 


முன்னதாக, தமிழ்நாட்டில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இத்திட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூபாய் 5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகையை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.   


மேலும், கொரோனா தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.