காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரானா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் அருகாமையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கழிவுகளை தினந்தோறும் குவியலாக கொட்டி எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியே வரும்  புகையால் நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுவதாக நோயாளிகள் வேதனை .

 



 

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல் பட்டு வருகிறது.நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாகவும் உள்ளது.  இங்கு தற்பொழுது உள்நோயாளிகளாக 600-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு தற்போது இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதில் 350 க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 



இந்நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சேரும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதால் மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக பிரேதப் பரிசோதனை செய்யும் அறை அருகே கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய முகக் கவசங்கள் பாதுகாப்பு உடைகள் மருத்துவக் கழிவு பொருட்கள் மற்றும் கழிவு உணவு பொருட்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு உள்ளதால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசி வருகிறது. அதிகளவு குப்பை சேரும் ஊழியர்கள் அவற்றுக்கு தீ வைத்து விடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 



 மருத்துவமனையின் பின்புறம் முக்கிய சாலை உள்ளதால் சாலைகளில் செல்பவர்களும் தூர்நாற்றத்தின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வரும் அறைகளின் அருகிலேயே குப்பைகள் அதிக அளவில் சேர்ந்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருப்பதால் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் அருகாமையில் கொட்டி எரிக்கபடுவதால் அதிகளவில் புகைமூட்டமாக நிறைந்து காணப்படுகிறது. இதனால் அருகாமையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 



 

ஏற்கனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் இதுபோல் செயலால் நோயாளிகளுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நாள்தோறும் சேரும் குப்பைகளை வெளியே கொண்டு சென்று  எரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நோயாளிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி முறையாக மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருந்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.