கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் மையப்பகுதியில் இருந்து வேகமாக பரவத் துவங்கியது. இதன் எதிரொலியாக மார்ச் 14ஆம் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மீண்டும் துவங்கியது மாவட்ட நிர்வாகம்.  மார்ச் மாதம் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து, மார்ச் மாதம் 31ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 250ஐ தாண்டியது. அப்போது தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500.



இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்த வண்ணமே இருந்தது. தேர்தலுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்தது , ஏப்ரல் 10-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியது.  சென்னை புறநகர் மாவட்டமாக இருந்த செங்கல்பட்டு தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பட்டியலில் 2ஆம் இடம் பிடித்தது. ஏப்ரல் 17ஆம் தேதி செங்கல்பட்டில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.



இதன் எதிரொலியாக மாவட்டத்தில் இருந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் மிக வேகமாக நிரம்பி வழிந்தன. இதன்காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு 

 ஆக்சன் வசதிகள் தேவைப்பட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மே 4ஆம் தேதி நள்ளிரவில் ஆக்ஸிஜன் அளவு குறைந்த காரணத்தினால் பிரஷர் டிராப் ஏற்பட்டு 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் மாவட்ட நிர்வாகம் விழி பிதுங்கி இருந்தது. இதனையடுத்து மே மாதம் ஆறாம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில்  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் மேல் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர் . அதேபோல்  மே மாதம் 13ஆம் தேதி நாளொன்றுக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500ஐ தொட்டது. அந்த சமயத்தில் படுக்கைகள் கிடைக்காமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டனர். 



 

 பல நோயாளிகள் மரத்தடியில் படுக்கைகள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர கடுமையான ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 22ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரானா  பாதிப்பு  1954 என குறையத் துவங்கியது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்து வந்த வண்ணமே இருந்தன.

 



 செங்கல்பட்டு மாவட்டத்தில் 145 பகுதிகள்  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவை திரும்பப் பெற்று, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக 25 இடங்கள் மட்டுமே இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான ஊரடங்கு அமலில் இருப்பதால் நேற்று நாளொன்றுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் 996 ஆக பதிவாகியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142715 , தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9382. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் தற்போது ஆறாம் இடத்திற்கு சென்று இருக்கிறது. அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 157 படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது. அதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் தற்போது காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 



இதுகுறித்து அரசு மருத்துவரிடம் கேட்டபோது கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த காரணத்தினால் மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னிசியன் உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் அதிக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டோம் இருந்தும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தோம். தற்போது கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் படுக்கைகள் காலியாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இப்பொழுது தான் எங்களுக்கு மனசு நிம்மதியாக இருக்கிறது என தெரிவித்தார்.



 

மூச்சு விட முடியாமல் திணறிய செங்கல்பட்டு மாவட்டம் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி தானே.